தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் இந்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அரச சேவையில் உள்ள பட்டதாரிகள்: இவர்களுக்கான இணையவழி (Online) விண்ணப்ப முறைமை நாளை (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள்: ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்திற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும்.
இதற்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகச் சமர்ப்பிக்க முடியும். இணையத்தளத்திலுள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” என்ற தெரிவின் ஊடாக விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் ஏனைய முறைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.




