பாதிப்பு ஏற்படும் போது எம்மால் மௌனமாக இருக்க முடியாது!

நாட்டில் ஆரம்ப காலங்களில் நிலவியதை விடவும் தற்காலத்தில் மிகவும் நுட்பமான ஒரு ஏகாதிபத்தியமே நடைமுறையில் உள்ளது. அன்று நாடு நேரடியாக ஆக்கிரமிக்கப்பட்ட போதிலும், இன்று பொருளாதார மற்றும் வர்த்தக பலத்தைப் பயன்படுத்தி மறைமுகமானதொரு ஏகாதிபத்தியமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடுகள் மட்டுமன்றி, சர்வதேச நிதி நிறுவனங்களும் கூட நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலில் தலையிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் கொண்ட, பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகும். இந்த வார்த்தைகள் அரசியலமைப்பில் மாத்திரம் இருந்தால் போதாது, அவை யதார்த்தத்திலும் காணப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை பெயரளவில் மாத்திரம் இருப்பது போதுமானதல்ல.

தற்போது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய நெருக்கடிகளும் சவால்களும் ஏற்பட்டுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில், பல்வேறு வல்லரசுகள் நமது நாட்டையும் அதன் வளங்களையும் கைப்பற்றும் நோக்கில் காத்திருக்கின்றன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், அன்று மன்னராட்சிக் காலத்தில் நமது நாட்டுக்கு ஆக்கிரமிப்பு சக்திகளாலும், பரம்பரை எதிரிகளாலும் சவால்கள் ஏற்பட்ட போது, மன்னர்களும், அமைச்சர்களும், மக்களும், இராணுவத்தினரும் நாட்டைப் பாதுகாக்க முன்வந்ததைப் போல, இன்றைய காலகட்டத்திலும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.