பாலியல் கல்வி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்த வேண்டும் அப்போது தான் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகாரங்கள் அமைச்சு  மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான  செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,தரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சபையில் குறிப்பிடப்பட்டது.ஆனால் இந்த பிரச்சினையில் உள்ள உண்மை அம்பலப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

பாலியல் கல்வி மற்றும் உறவு நிலைகளின் முக்கியத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய நிலையில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவு சமூக மட்டத்தில் மிகவும் குறைவான மட்டத்தில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆகவே பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்தாமல் இருந்தால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. களனி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுக்கமைய, 62 சதவீதமான பெண்கள் தமது நெருக்கமானவர்களினால் தாக்கப்படுகிறார்கள், 50 சதவீதமான பெண்கள் தமது கணவன்மார்களினால் கொலை செய்யப்படுகிறார்கள்., 82 சதவீதமான பெண்கள் தமது வீட்டில் இடம்பெறும் முரண்பாடுகளினால் கொலை செய்யப்படுகிறார்கள்.ஆகவே இவ்வாறான நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள பாடசாலைகளில் 23 சதவீதமான பாடசாலைகளில் மாத்திரம் ‘ சிறுவர் பாதுகாப்பு மையங்கள்’ உள்ளன.ஆகவே பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தரப்படுத்தல்களை முன்வைப்பது முன்னேற்றகரமானதல்ல,நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த வேண்டும் என்றார்.