நாடாளுமன்றத்தில் நேற்று (4) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக TISL தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத் தோல்விகளைச் சரிசெய்து, பாதிக்கப்படக்கூடிய கடன் பெறுபவர்களைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சட்டம் அந்த நோக்கத்தை அடைவதில் கணிசமான பின்னடைவைக் கண்டுள்ளது.
2024ஆம் ஆண்டு TISL மற்றும் ஏனையோரால் தாக்கல் செய்யப்பட்ட சட்டமூல சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் நுண்கடன் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் சமமான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
எனினும் புதிய சட்டமானது குறித்த அரசியலமைப்பு முரண்பாடுகளையும் ஒழுங்குமுறை குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யத் தவறியுள்ளதாகவும் இது குறிப்பிடத்தக்க இடைவெளிகளை விட்டுச் சென்றுள்ளதாகவும் TISL இன் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
இயற்றப்பட்ட இச்சட்டம் சில நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட வாசகங்களை நீக்கியுள்ளது. எவ்வாறாயினும் சமத்துவமற்ற விதிமுறைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்ட அரசியலமைப்பு முரண்பாடுகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. புதிய சட்டமானது “நுண்கடன் வணிகம்” என்பதற்கான வரைவிலக்கணத்தையே சார்ந்துள்ளது. இதன்படி குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கடன் வழங்குவது, அதன் முதன்மை நோக்கம் “சமூக வலுவூட்டலாக” இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நுண்கடனாக கருதப்படும்.
பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள கடன் பெறுபவர்களுக்கு நுண்கடன் போன்றே சிறிய அளவிலான கடன்களை வழங்கவும், அதேவேளை அவை ‘வணிக நோக்கம்’ கொண்டவை எனக் கூறி நுண்கடன் வகைப்பாட்டுக்குள் வராமல் தப்பிக்கவும் இந்த இடைவெளி வழிவகுக்கிறது. இதன் மூலம் உரிமம் பெற்ற நுண்கடன் நிறுவனங்களுக்குப் பொருந்தக்கூடிய வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளில் இருந்து அவை தப்பித்துவிடுகின்றன.
இதன் விளைவாக கடனின் தன்மை அல்லது கடன் பெறுபவரின் நலிவுற்ற நிலையை காட்டிலும் கடன் வழங்குபவர் தனது நோக்கத்தை எவ்வாறு விவரிக்கின்றார் என்பதையே கடன் பெருபவருக்கான பாதுகாப்பு சார்ந்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் தடுக்கப்படவேண்டும் என்று தீர்மானித்த அந்த சமத்துவமின்மையை மீண்டும் உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்த சட்டத்தை வரைவு செய்ததில் உள்ள ஆழமான பலவீனங்களையும் பிரதிபலிக்கிறது.
கடன் பெறுபவர் பாதுகாப்பு பற்றி சட்டம் குறிப்பிட்டாலும், அந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பொதுப்படையாகவேயே உள்ளன.
மேலும் அவற்றை செயல்முறைப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் இச்சட்டத்தில் இல்லை.
• வருமான சரிபார்ப்பு தரநிலைகள் அல்லது வருமானத்திற்கும் கடனுக்கும் இடையிலான விகித வரம்புகள் கட்டாயமாக்கப்படவில்லை.
• ஒழுங்குமுறை முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான தெளிவான வழிமுறை இல்லை.
• சில நடவடிக்கைகளில் கடன் பெறுபவர்கள் சட்ட பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நுண்கடன் துறையானது மிரட்டல், வற்புறுத்தி கடனை அறவிடுதல் மற்றும் பெண் கடன் பெறுபவர்களை இலக்குவைத்த பாலியல் இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற கடுமையான துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. இருப்பினும், இத்தகைய நடத்தைகளை ஒழுங்குமுறை மீறல்களாக கருதவோ, உரிமம் பெற்றவர்களுக்கு கட்டாய அறிக்கையிடல் கடமைகளை விதிக்கவோ அல்லது இத்தகைய முறைகேடுகளுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் தடைகளை வழங்கவோ இந்தச் சட்டம் தவறிவிட்டது. இந்த அபாயங்களை இணக்கம், மேற்பார்வை மற்றும் உரிமம் வழங்கும் வழிமுறைகளுடன்; ஒருங்கிணைக்காமல் கடன் பெறுபவர்களைபாதுகாப்பதாக கூறும் சட்டத்தின் நோக்கம் முழுமையற்றதாகவே இருக்கும்.
முன்மொழியப்பட்டுள்ள அதிகார சபையின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள பலவீனங்களையும் TISL சுட்டிக்காட்டுகிறது. இதில் கட்டாயமான நலன்சார் முரண்பாடு வெளிப்படுத்தல்கள் இல்லாதது, மானியங்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பான போதிய வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் போதுமான பொறுப்புக்கூறல் பாதுகாப்புகள் இன்றி தன்னிச்சையான அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது ஆகியவையும் அடங்கும். ஒரு பயனுள்ள ஒழுங்குமுறை நிறுவனம் வலுவான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை தரநிலைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
இந்தச் சட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, நலிவடைந்த சமூகத்தினருக்குச் சேவை செய்யவும் அவர்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள கடுமையான தோல்வியைக் காட்டுகிறது. நுண்கடன் பெறுபவர்களில் பெரும்பான்மையானோர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாகத் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளச் சிறிய கடன்களை நம்பியிருக்கும் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினரே இதில் அதிகம். இவற்றுக்குப் பொருத்தமற்ற ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் எந்தவொரு சுரண்டல் மற்றும் சூறையாடும் கடன் நடைமுறைகளைத் தடுக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதோ அதே ஆபத்துகளுக்கு இந்தச் சமூகங்களை அரசாங்கம் மீண்டும் ஆளாக்கியுள்ளது.
இச்சட்டத்தில் பிரதிபலிக்கும் கவலைகள், இலங்கையின் தெளிவற்ற மற்றும் துண்டு துண்டான சட்டம் இயற்றும் நடைமுறையின் குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தச் சட்டத்திற்கான திருத்தங்களை உருவாக்குவதிலும் இனிவரும் அனைத்து எதிர்கால சட்டங்களை வரைவு செய்வதிலும் உண்மையான ஆலோசனையுடனான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
கொள்கை உருவாக்கம் மற்றும் சட்ட வரைவு ஆகியவற்றின் ஆரம்பக் கட்டங்களிலேயே அதாவது கட்டமைப்பு ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட பிறகு அல்லாமல் பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைக்க வேண்டும்.



