நாட்டில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள இலக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் நிதியுதவியுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய நாட்டில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அடையாள இலக்கமொன்று வழங்கப்படும். 15 வருடங்களின் பின்னர் அந்த இலக்கத்தைக் கொண்டு அவர்கள் தமக்கான டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிறுவனத்திடமிருந்தே இதற்கான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன என்றார்.