புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நேற்று (11) அந்தந்த மாவட்டச் செயலகங்களில் நடைபெற்றன.
புத்தளம் மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டங்கள்
புத்தளம் மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் கடலோர அரிப்பைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
வெல்லமங்கர கடற்றொழில் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிறிய இறங்குதுறைகளை (Finger jetties) அமைப்பதற்கான முன்மொழிவுகளை 2027 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
‘டித்வா’ சூறாவளியினால் சிலாபம் துறைமுகம் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புனரமைக்கும் பணிகள் சீ-நோர் (C-Nor) மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
புத்தளம் மாவட்டக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக குமார, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் மொஹமட் பைசால் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையின் வெற்றி
குருநாகல் மாவட்டத்தில் நன்னீர் மீனவத் துறை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளமையை பிரதி அமைச்சர் ரத்ன கமகே இங்கு விசேடமாகப் பாராட்டினார்.
NAQDA, NARA, அரச நிறுவனங்கள் மற்றும் மீனவர் அமைப்புகளின் கூட்டுமுயற்சியினால், கடந்த குழு கூட்டத்தில் இனங்காணப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் தற்போது வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு இடத்தைத் தவிர, குருநாகலில் உள்ள ஏனைய அனைத்து குளங்களையும் அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்த முடிந்துள்ளதாக மீனவ பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கீதா ஹேரத், வடமேல் மாகாண செயலாளர், பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தவிசாளர் சஞ்சீவ கருணாசாகர மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், சீ-நோர் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து அவற்றுக்கு நடைமுறை மற்றும் துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரச பொறிமுறைக்கும் மீனவ சமூகத்திற்கும் இடையில் நிலவும் இந்தச் சிறந்த ஒருங்கிணைப்பானது,
இலங்கையின் மீன்பிடித் துறையை ஒரு மறுமலர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வதற்கான அரசாங்கத்தின் தளராத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.





