புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் பாதுகாப்பு: 1,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

அரிசியை பதுக்கி வைத்தமை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக 170க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 5,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக சில பொருட்களின் விலைகள் உயர்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும், சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இறக்குமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் தனியார் நிறுவன எரிவாயு தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த தலைவர், குறித்த நிறுவனத்திற்குரிய எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி எரிவாயுவை பதுக்கி வைக்க வேண்டாமென வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்த அவர், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.