”புலம்பெயர் தொழிலாளர்களை செயலி மூலம் ஒருங்கிணைக்கலாம்”

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் முழு செயல்பாடுகளும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒரு செயலி மூலம் ஒருங்கிணைக்க முடியும் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற ஜெயகமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தேவையற்ற தலையீடுகளை முறியடிப்பதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளை திறம்பட கையாள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வழிவகுக்கும் .

இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் இருந்து கடத்தல்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களை அகற்ற உதவும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

“இச்செயலி மூலம் குறைகளைக் கையாளும் நடைமுறைகளையும் மேம்படுத்த முடியும்,” எனவும் அவர் கூறினார்.

“இந்தத் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும்போது, ​​அது தூதரகத்தில் உள்ள விவகாரங்கள், பணியாளர்கள் மற்றும் SLBFE ஆட்சேர்ப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கும்.

“ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் தொலைபேசியிலும் ஒரு செயலி இருக்கும். செயலி, தூதரகம் மற்றும் பணியாளர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை எளிதாக்கும்,” என்று அவர் கூறினார்;

“ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி பிரச்சினையில் அல்லது இக்கட்டான நிலையில் இருக்கும்போது கொழும்பில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு உடனடியாக ஒரு செய்தி மூலம் அறிவிக்கப்படும்.”
இந்த செயலி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் போது, ​​இத்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்,” என்றார்.
தற்போதைய SLBFE சட்டத்தின் கீழ், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு உப முகவர்கள் மீது எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

“துணை முகவர்களைக் கையாள்வதற்காக SLBFE சட்டம் திருத்தப்பட்டுள்ளது, அது இப்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. அது விரைவில் பாராளுமன்றத்திற்கு செல்லும்.

அதற்குப் பிறகு, உரிமம் பெற்ற ஏஜென்சியைப் போலவே துணை முகவர்களும் ஒழுங்குபடுத்தப்படுவார்கள். எவ்வாறாயினும், திருத்தத்தின் கீழ், இந்த துணை முகவர்களுக்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.