பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி – பூநகரி பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மக்கள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் தொழிற்சாலைக்கான கல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

‘விவசாய நிலங்களை அழிக்காதே’, ‘ஏழை மக்களின் வளங்களை சுரண்டி பிழைக்காதே’, ‘சுன்னக்கல் அகழ்வு வேண்டாம்’, ‘சீமெந்து கம்பனியே வெளியேறு’ போன்ற வாசகங்களை பதாதைகளில் குறிப்பிட்டுள்ள நிலையில், அவற்றை ஏந்தியவாறும் அவ்வாறே கோஷங்களை எழுப்பியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.