பெருந்தோட்டத் துறையில் பெறுமதியை கூட்டும் செயற்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரமேஷ் பத்திரன, இதன் ஆரம்ப கட்டப் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத்துறைக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் போன்ற விடயங்களில், தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.