பேருந்தில் நடத்துநர் போல் நடித்து பண மோசடி!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் நபர் ஒருவர் நடத்துநர் போல் நடித்து, பண மோசடி செய்த சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நடத்துநர் போல் கையில் பணத்தாள்களை செருகி வைத்துக்கொண்டு பயணச்சீட்டுக்கான பணத்தை கேட்டு, வாங்கிக்கொண்டு சில நிமிடங்களில் பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றதாக பணத்தை பறிகொடுத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் 34, 35 இருக்கைகளில் அமர்ந்திருந்த தாயும் மகனும் மற்றும் எதிர்ப்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவருமே பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணத்தை பறித்த நபர் பேருந்திலிருந்து இறங்கிச் சென்ற பின்னர் பேருந்தின்  நடத்துனர் பயணச்சீட்டுக்கான பணத்தை கோரியுள்ளார்.

அப்போதுதான் தாங்கள் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்ததை அறிந்ததாகவும், மர்ம நபர் தம்மிடம் பணம் பெற்றபோது நடத்துநரும் சாரதியும் பார்த்துக்கொண்டு இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் அங்கிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி இருந்துள்ளது என்பதுடன்  அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.