பொதுச் செயலாளர் பதவிக்கு ரவீந்திர தீப் குலசேனவின் உரிமை கோரல் சட்டவிரோதம்

லங்கா சமசமாஜக் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினருமான சந்தன ரணசிங்க  தெரிவித்துள்ளார்.

அண்மையில் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயற்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் வெற்றிடம் நிலவி வருகின்றது. இப்பதவி குறித்து கட்சியின் உட்புறத்தில் எழுந்துள்ள பிணக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானிப்பதை தேர்தல் ஆணைக்குழுவும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களாக ரவீந்திர தீப் குலசேன என்பவர் தான்தான் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் என அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்.

இச்செயற்பாடானது கட்சியின் கௌரவத்திற்கும் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்திற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.தற்போது கட்சியின் மத்திய குழு அரசியல் குழு மற்றும் பொருளாளர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அனைவரும் கட்சி காரியாலயத்திலேயே ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக எமது பொருளாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமே அதற்கான சான்றாகும். கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வாறான போலி உரிமை கோரல்களை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இக்கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை ரவீந்திர தீப் குலசேன உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதனைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு எதிராக மிக விரைவில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்கின்றோம் என்றார்

சமீபத்திய செய்திகள்