அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது:
இதுவரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமே எரிபொருள் விலைச் சூத்திரத்தை முன்னெடுத்தது. இந்த புதிய முறையின் மூலம் அனைத்து நிறுவனங்களுக்கும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், எதிர்காலத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மட்டுமே அமைச்சு முடிவு செய்யும். ஒரு நிறுவனம் விலையைக் குறைக்கும் போது, ஏனைய நிறுவனங்களும் விலையைக் குறைப்பதன் மூலம் நாடு பெரும் நன்மையை அடையும் என்றார்.