போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: 1.5 லட்சத்துக்கும் மேல் கைது

போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ திட்டத்தின் கீழ் இதுவரையான காலப்பகுதியில் 1,52957 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1979 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுய விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வு பெறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால் 06  குறுகியகால சிகிச்சை  மற்றும் புனர்வாழ்வு நிலையங்களை அமைப்பதற்கும், அதற்குத் தேவையான பணிக்குழாமினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், அனுமதியளிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக்காலத்தில் ‘முழு நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்  அமுல்படுத்தப்பட்டதற்கு இணையாக சுயமாக முன்வந்து சிகிச்சை சேவைகளை நாடுகின்றவர்களின்  எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சிகிச்சை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள  வதிவிட வசதிகள் போதுமானதாக இல்லை.

அதற்கமைய,  நாடளாவிய ரீதியில், கட்டமைக்கப்பட்ட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை விரிவாக்கம்  செய்யவேண்டிய அவசர தேவைகள் மேலெழுந்துள்ளது. அதற்குத் தீர்வாக சுயமாக சிகிச்சைக்காக  முன்வருகின்றவர்களுக்கு குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமாக பரிமாற்றம்  செய்வதற்குப் பொருத்தமான, 06 குறைப்பயன்பாட்டு அரச கட்டிடங்கள் அடையாளங்  காணப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களை அரச வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள குறுகியகால சிகிச்சை  மற்றும் புனர்வாழ்வு நிலையங்கள் 06 இனைத் தாபிப்பதற்கும், அதற்குத் தேவையான பணிக்குழாமினரை  ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்  அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்கள், துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் , சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய   இக்காலப்பகுதியில் 1912 கிலோகிராம் ஹெரோய்ன்,1976.9 கிலோகிராம் ஐஸ், 271.39 கிலோகிராம் கொக்கைன், 5126 கிலோகிராம் கஞ்சா, 77 இலட்சம் கஞ்சா செடிகள் மற்றும் 11 இலட்சம் பல்வேறு வகையான போதை குழிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகத்தின் அடிப்படையில் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 282 சட்ட விரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2595 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 1979 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் நிறுவன மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் சுய விருப்பத்த்தின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளார்கள். இவர்களுக்குரிய போதுமான வசதிகளை வழங்குவதற்காகவே புதிய கட்டங்களை பெறுவதற்கும், சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.