போதைப்பொருள் மற்றும் அழகுசாதன,மருந்து பொருட்களுடன் இருவர் கைது!

சுமார் 1 கோடியே 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள், நிறத்தை மெருகூட்டும் கொலாஜன் (Pink Gluta Collagen) மற்றும் விட்டமின் சி மாத்திரைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Channel வழியாக இவற்றை கடத்த முயன்ற போதே, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை மற்றும் மருதானை ஆகிய பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 12.20 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து எயார் ஏசியா FD-140 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து, 01 கிலோகிராம் 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 2,160 கொலாஜன் (Collagen) பொட்டலங்கள், 6,390 விட்டமின் சி மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான கொலாஜன் மற்றும் விட்டமின் சி மாத்திரைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) முறையான அனுமதி அவசியமாகும்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கொலாஜன் மற்றும் விட்டமின் சி மாத்திரைகள் தொடர்பான விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.