மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்றுறைகளுக்கும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நிவாரணம் அளிக்க 100 பில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களை பார்க்கும்போது நிலைமைகள் தொடர்பாக அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. ஆனால் மக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முப்படையினருக்காக விசேட வசதிகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் பயிற்சிகளுக்கான செலவுகளை குறைக்கும் வகையில் ஓய்வு காலம் முடிவடைந்த பின்னர் மேலும் ஐந்து வருடங்களுக்கு திறமையானவர்கள் தமது சேவையில் தொடரக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் அவசரகால நிலையை மேலும் நீடிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதாவது நவம்பர் 28ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 22 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீளக் குடியேற்றும் மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும், அதிகாரிகளுக்கு வசதியான வகையிலும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவையுள்ளது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் 29 பாதுகாப்பு முகாம்கள் தொடர்ந்தும் நடத்திச் செல்லப்படுகின்றன. இது தொடர்பான பலமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அந்த பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. சகல விடயங்களுக்கும் நிதி, உதவிகள் வழங்கப்படுகின்றன.
வீடமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது நிரந்தர தீர்வாகவே இருக்கும். மீண்டும் மண்சரிவு அனர்த்தனம் ஏற்படாத இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை குடியேற்ற வேண்டும். அந்த வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக சேதமடைந்த 5866 வீடுகளுக்கு பாதுகாப்பான காணிகளை அடையாளம் கண்டு அதற்கு தேவையான நிதி உதவி வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையில் சில சேவைகளை உறுதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, எரிவாயு விலை உயர்வு என பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணமளிக்க 100 பில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது நிலைமைகள் தொடர்பில் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே தெரிகின்றது. ஆனால் மக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம் என்றார்.




