மடிக்கணினிகளை திருடிய மாணவர்கள் கைது

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அடுத்த வருடம் சாதாரணத்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் போயா தினத்தன்று மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மடிக்கணினிகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  திருடப்பட்ட 12 மடிக்கணினிகள் பாதுக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.