மட்டக்களப்பில் கடத்தல், கொள்ளை : மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது!

மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில்  மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட அறுவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கடத்தி, அவர்களுக்குச் சத்திர சிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளைத் தெளித்து மயக்கமடையச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து மயக்க மருந்தைத் தெளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து தெளிக்கும் கருவி  ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் காணாமல் போயிருந்தனர்.

மறுநாள் குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதுடன், இதன்போது, அதே கிணற்றுக்குள் இருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 முச்சக்கரவண்டிகள், 1 கார், கோடரி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆறாவதாக மேற்குறிப்பிட்ட முச்சக்கரவண்டி சாரதியும் கைதாகியிருக்கிறார்.

இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.