மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை  அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் மகளின் கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ளபோது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். மாமியார் உயிரிழந்ததை அடுத்து 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பிஓடியுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளனர்.

அத்தோடு, நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.