மத்திய கிழக்கில் தொடரும் மோதல் போக்கு காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொதி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் அதிகளவில் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அஞ்சல் சேவைகளை நேரடியாகப் பாதித்துள்ளதாகவும், இதனால் சில நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் தாமதங்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை சேகரிக்கப்பட்ட பல அஞ்சல் பொதிகள், விமான இரத்துக்கள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த இடையூறுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட நாடுகளின் தபால் நிர்வாகங்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சத்குமார தெரிவித்தார்.
நிலைமை சீரானதும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். இருப்பினும், நீண்டகால தாமதங்கள் காரணமாக எளிதில் அழுகக்கூடிய அல்லது காலக்கெடு உடைய பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
இந்த பாதிப்புகள் இலங்கையை மட்டுமன்றி, பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளையும் பாதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



