அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொண்ட காலத்திற்குப் பதிலாக, பேரழிவுகளுக்கு முன்னால் மீண்டெழுந்து, முன்பை விட சிறந்த நாட்டை மக்களுக்கு விட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் மாற்றத்துடன் நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றியமைக்கவோ பின்வாங்கவோ இந்த அனர்த்தம் காரணமாக அமையாது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து திறன்களையும் இணைத்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை திறம்பட முன்னெடுக்க அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் லோட்டஸ் அரங்கில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

‘Rebuilding Sri Lanka’ இற்காக வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் ஏனைய நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளமும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வலுவான, நியாயமான மற்றும் நிலைபேறான முறையில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கை, என்ற நோக்குடன் அனைவரையும் ஒன்றுசேர்த்து வெளிப்படையானதும் நிலைபேறானதுமான செயற்பாடுகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மக்கள், வளங்கள் மற்றும் ஆலோசனைகளை ஒன்றிணைக்கும் தளமாக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் ஊடாக நன்கொடைகளையும் வழங்க முடியும். மேலும், அந்த நன்கொடைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த இணையத்தளத்தில் பார்வையிடலாம். இது நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.

நிதி உதவி, பொருள் உதவி, காணி போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இதில் வழங்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் தன்மை தொடர்பான உறுதியான மற்றும் உண்மைத் தகவல்களை மாவட்ட ரீதியாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணிகளை நன்கொடையாக வழங்கிய பலரின் காணிகள் பற்றிய தகவல்களும் இன்று இணையத்தில் சேர்க்கப்பட்டன.

இயற்கை அனர்த்தங்களுக்கு உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லை என்றாலும், நமது நாட்டில் நிலவும் சமத்துவமின்மை காரணமாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களே 80% க்கும் அதிகமாக இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டார்கள் என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தும் நோக்கத்திலேயே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்க தீர்மாணிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், உலகில் பல நாடுகள் வெறுமனே கால ஓட்டத்தில் கட்டியெழுப்பப்படவில்லை என்றும், மாறாக அதிர்ச்சிகளை எதிர்கொண்டும், அவற்றைத் தாங்கிக்கொண்டும், அவை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த மீள்கட்டமைப்புக்காகப் பெறப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்பேற்று, நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை பேணப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தில் தான் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளை, அரச பொறிமுறை, நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்கள் மீதும் தனக்கு வலுவான நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
கடந்த வருட இறுதியில் எமக்கு நாடென்ற வகையில் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது. அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கையில் நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தாம் சார்ந்த துறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்டனர்.
வர்த்தகராக இருந்தால் வர்த்தம் வீழ்ச்சி அடைந்தது. பாடசாலை மாணவராக இருந்தால் கல்வி பாதிக்கப்பட்டது. நோயாளிகள் இருந்தால் மருந்தின்மைக்கு முகங்கொடுத்தனர். எனவே சகல மக்கள் பிரிவினரும் தாம் சார்ந்த துறைக்கு அமைவாக இந்த நெருக்கடிக்கு பலியானார்கள். அதனால் மீண்டும் அவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்காமல் எமது நாட்டை மீளமைத்து எதிர்பார்ப்புகளுடனான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திடமான உறுதி எமது மக்களிடம் இருந்தது.
அவ்வாறான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தான் மக்கள் எமக்கு ஆட்சியை ஒப்படைக்கும் துணிச்சலான முடிவை எடுத்தனர்.அது மிகவும் துணிச்சலான முடிவு என நான் நம்புகிறேன். நாம் ஆட்சி செய்த அனுபவம் உள்ள குழுவல்ல. எம்மைப்பற்றி பலரும் பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்தார்கள். எமக்கு வெளிநாட்டு உறவுகள் உள்ளதா? வர்த்தகங்களை சுவீகரிப்பார்களா? வர்த்தகம் செய்வதற்கு இடையூறு செய்வார்களா? அரச பொறிமுறையை முடக்குவார்களா? என பாதகமான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மக்கள் அவற்றை செவிமடுக்காமல் எம்மீது நம்பிக்கை வைத்தமை துணிச்சலான முன்னெடுப்பாகும். அந்த துணிச்சலான முன்னெடுப்பில் எமது நாடும் எமது நாட்டு மக்களும் முகங்கொடுத்திருந்த நெருக்கடி நிலை மீண்டும் நாட்டுக்கு ஏற்படாமல் எதிர்பார்ப்புடனான நாட்டை கட்டியெழுப்புவார்கள் என எதிர்பார்ப்பு அதில் அடங்கியிருந்தது. நாம் ஆட்சியை ஏற்று அதற்கு திட்டங்களை வகுத்து சில துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை எட்டியிருந்தோம்.
2025 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஆண்டாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் அரச சேவையின் செயற்திறனிற்கும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கவும் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையிலே எமக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது.
நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை இந்த அனர்த்தம் குழப்பிவிடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரல் நிலைபேறான ,எமது எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திட்டம் என்பதில் எமக்கு திடமான உறுதி இருந்தது. எனவே எத்தகைய அனர்த்த நிலையிலும் நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை மாற்றுவதில்லை என்ற திடமான முடிவுக்கு வந்துள்ளோம். இது மிக முக்கியமானது. இந்த அனர்த்தத்தின் மீது பலிபோட்டு எமக்கு தப்பித்துக் கொள்ள முடியும். கடந்த காலத்தில் அவ்வாறு நடந்துள்ளது. அனைத்துவிதமான அழிவுகள், குற்றங்கள், வீழ்ச்சிகளை அனர்த்தத்தை காரணம் காட்டி மறைத்தார்கள். கடந்த காலத்தில் அவ்வாறு தான் பயணித்தார்கள். 30 வருட காலம் யுத்தத்திற்கு சகல நாசங்களையும் மறைத்தனர். சகல அழிவுகளுக்கும் காரணம் யுத்தம் தான். அவ்வாறானவர்கள் இருந்தார்கள். அல்லது சில தொற்று நோய்கள் தான் அழிகளை மறைக்கும் கவசங்கள்.
நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவோ அதனை செயலிழக்கச் செய்யவோ அனர்த்தத்தை கவசமாக மாற்றுவதில்லை என்ற முக்கிய நிலைப்பாட்டை எடுத்தோம்.
ஏதாவது ஒரு அனர்த்தத்தை தமது இயலாமையை மறைப்பதற்கான கவசமாக எமது நாட்டு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் பயன்படுத்தினார்கள். எமக்கு அவ்வாறு தேவையில்லை. நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலொன்று இருக்கிறது. அதனை அதேபோன்று பயன்படுத்தும் எதிர்பார்ப்பு எமக்குள்ளது.
அனர்த்தத்தின் போது பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை ஒதுக்கி இந்த அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்குமாறு பலரும் கோரினார்கள். வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக மாற்றி இந்த அனர்த்தத்திற்கு ஏற்றவாறு வரவு செலவுத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் சிலர் கூறினார்கள். நாம் அவ்வாறு செய்யவில்லை.
இந்த வரவு செலவுத் திட்டம் எமது நாடு,எமது பொருளாதாரம், எமது நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டது என்பதனாலே நாம் அவ்வாறு செய்யவில்லை. நாம் எதற்காக போராடுகிறோம். நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரல், திட்டத்தை பின்வாங்காமல் இந்த அனர்த்தத்திற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலே போராடுகிறோம். சூறாவளி அனர்த்தத்திற்கு முன்னர் சமர்ப்பித்த அதே வரவு செலவுத்திட்டம் தான் டிசம்பர் 5 ஆம் திகதி நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சில சம்பவங்களினால் வரவு செலவுத் திட்டத்தை ஒதுக்கத் தேவையில்லை என்று நாம் கருதுகிறோம்.
வரவு செலவுத் திட்ட உத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதற்காக மேலதிக நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு பெறுவது என்ற சவாலுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதன் பிரகாரம் சில சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் வாயிலான உள்ள அதிகாரம் மற்றும் மக்களின் ஆணையை பயன்படுத்தினோம். நாம் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளோம். எந்த அமைப்பின் அழுத்தத்திற்கும் எமது மக்கள் ஆணையை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
இந்த அனர்த்தத்திற்காக மாத்திரம் செலவிட 500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை முன்வைத்தோம். மேலும் தேவையானால் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சில பிரதேசத்திற்குரிய முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை செலவிட முடியும்.நாம் தயாரித்துள்ள நீண்ட காலத் திட்டத்தை மாற்றாமல் இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.
அனர்த்தத்தின் ஆரம்பத்தில் மக்களை மீட்கும் சவாலை எதிர்கொண்டோம். சுமாராக 7 இலட்சம் குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர். 24 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 6 000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 110 000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. சேதமடையாத ஆனால் குடியிருக்க பொருத்தமற்றவை என 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளங் காணப்படுகின்றன.
மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டும். 2026 வரவு செலவுத் திட்டத்தில் 31 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டோம். குறிப்பாக 2009 யுத்தம் நிறைவடைந்தாலும் யுத்தத்தினால் வீடுகளை இழந்த பெருமளவானவர்கள் வடக்கில் இடம்பெயர் முகாங்களிலும் சிறு குடிசைகளிலும் தங்கியுள்ளனர். 2500 வீடுகளை கட்ட வரவு செலவுத் திட்டத்தில் 5 000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. நாம் அதனை மாற்றவில்லை. அதே போன்று கிராமங்களில் பொருளாதார நெருக்கடிகளுடன் உள்ள மக்களுக்காக கிராமத்தவரின் உதவுயுடன் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்த வருடத்தில் 10 000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 10 ஆயிரம் மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.10 இலட்சம் நிதி அனுசரணை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அவை அனைத்தையும் ஒன்றிணைத்தால் 2026 இல் சுமார் 50 000 ற்கும் அதிகமான வீடுகளை கட்ட வேண்டியுள்ளது.
இந்த அனர்த்தம் தொடர்பில் உலக வங்கி அடிப்படை மதிப்பீடொன்றை தயாரித்துள்ளது. 4.1 பில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எமது திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் 2.8 பில்லியன் டொலர்களாகும். உலக வங்கி சொன்ன தொகை இது. இணையத்தில் இருக்கும் தொகை இவ்வாறு உள்ளது என கேள்வி எழுப்பலாம்.
இது வரை அடையாளங் கண்டுள்ள திட்டங்களின் படி 2.8 பில்லியன் என மதிப்பிட்டுள்ளோம். இன்னும் திட்டங்கள் அடையாளங் காண வேண்டும். அழிவின் அளவை விட அழிவிற்கான செலவையே மதிப்பிட்டுள்ளோம்.
ஏதாவது கிராம சேவகர் பிரிவில் வீதியொன்று உடைந்திருந்தால், எமது தரவுக் கட்டமைப்பில் மாவட்டம், பிரதேசம்,கிராம சேவகர் பிரிவு,கிராமம், பாதை ஆகிய தகவல்கள் உள்ளன. அவ்வாறு தான் 2.8 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்டுள்ளது. இது அண்ணளவான மதிப்பீடு அல்ல. அதில் மேலும் தரவுகள் இணைக்கப்பட வேண்டும். அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மதிப்பிடப்பட்ட திட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் எழுச்சி பெறும் நிலையில் இந்த அனர்த்தம் ஓரளவு அதிர்வை ஏற்படுத்தியது. அதனை நாம் ஏற்கிறோம். திட்டமிட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில் இந்த அனர்த்தம் பொருளாதார கட்டமைப்பிற்கு ஓரளவு அதிர்வை ஏற்படுத்தியது.
எந்த ஒரு சமூகத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாதையில் அதேபோன்று பயணிப்பதால் பரிமாற்றம் ஏற்படாது. அதில் ஏற்படும் அதிர்வின் ஊடாகத் தான் அரசுகள் உருவாகியுள்ளன. ஓடிக்கொண்டிருக்கும் அதே போக்கில் அரசுகள் உருவாகாது.
ஆனால் அதிர்வுகள் அதற்கு முகங்கொடுப்பது என்பவற்றின் ஊடாக கட்டியெழுப்பப்படுவதன் ஊடாகவே உலகில் அரசுகள் உருவாகியுள்ளன. இந்த அனர்த்தம் சமூக தேகத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எமக்குத் தெரிவு செய்வதற்கு இரு பாதைகள் உள்ளன.
அந்த அனர்த்தம் தொடர்பில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். அந்த அதிர்வில் இருந்து தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எமக்கு எழுச்சி பெற முடியும். இரண்டாவது பாதையை தான் நாம் அரசாங்கமென்ற வகையில் தெரிவு செய்துள்ளோம். இந்த அதிர்வில் இருந்து எழுச்சி பெறவும் இருந்ததை விட சிறந்த நாட்டை கட்டியெழுப்பவும் நாம் போராடுகிறோம்.
நான் பல பிரதேசங்களுக்கு மாவட்ட மட்டத்தில் சென்றேன். இந்த அனர்த்தத்தில் பொதுவான ஒரு போக்கு காணப்படுகிறது. யார் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்? பொதுவாக அனர்த்தங்களுக்கு ஏற்றத்தாழ்வு கிடையாது என்பார்கள். இயற்கை அனர்த்தங்களுக்கு அனைவரும் சமமாக பாதிக்கப்படுவதாக கூறுவர். இல்லை. எமது நாட்டிலுள்ள ஏற்றத்தாழ்வினால் இயற்கை அழிவுக்கு மக்கள் சமமாக முகங்கொடுப்பதில்லை. உயரம்,குட்டை , பணம் இருக்கிறதா, இல்லையா? கிராமமா நகரமா, என்ற பேதமின்றி இயற்கை அனர்த்தத்திற்கு பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது அவ்வாறில்லை.இயற்கை அனர்த்தங்களுக்கும் ஏற்றத்தாழ்வுடனே பாதிக்கப்படுகின்றனர். யார் பாதிக்கப்படுகின்றனர்?
மிகவும் ஆபத்தான இடங்களில் வீடுகளை கட்டி வாழ்பவர்கள், தமது வீடு காற்றிற்கு சிறு வெள்ளத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாத வீட்டை வைத்திருப்போர், 80 வீதத்திற்கும் அதிகமானோர் சமூக ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் “இப்பலோகம” பகுதியில் இரு வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கச் சென்றேன். அவை வீடுகளா என்று சென்று பாருங்கள். நிகவெரட்டிய பகுதிக்கும் சென்றேன். அங்கும் அதே நிலைமை தான்.
80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பொருளாதா ஏற்றத்தாழ்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் குழுக்கள் தான் இதற்குப் பலியாகியுள்ளனர். சிறு வயல் செய்து வாழ்ந்தவர்,ஓரிரு கால்நடைகளை வளர்த்து வாழ்ந்தவர்,பாதையில் மரக்கறி விற்று வாழ்ந்தவர், அநுராதபுரம் மிரிஸ்வெடியவுக்கு அருகில் மலர் விற்றவர்கள், வீட்டில் மலர்சாடிகளை தயாரித்து விற்றோர் போன்றோரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறானால் எமக்குள்ள பொறுப்பு என்ன? இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள அந்த மக்கள் சமூகத்தை அதே நிலைக்கு கட்டியெழுப்புவதா அல்லது அதனை விட உயர்வாக கட்டியெழுப்புவதா என்பதே எமக்குள்ள பொறுப்பாகும். அதே நிலையில் அவர்களை கட்டியெழுப்பத் தேவையில்லை.
ஏனென்றால் வறுமையினால் தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனையும் தாங்கிக் கொண்டு அதே நிலைக்கு அவர்கள் செல்வார்கள். அவர்களை அதே நிலைக்கு அன்றி அதனைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம். அதனால் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியிருக்கும். அனைவருக்கும் 5 மில்லியன் பெறுமதியான வீட்டை கட்டிக்கொடுப்போம். ஆனால் அவர்களின் வீடு அந்தளவு பெறுமதி கிடையாது என சில அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர் வாழ்ந்தது போன்ற வீடா அல்லது அவரது வாழ்க்கையை சுதந்திரமாக வாழக்கூடிய வகையிலான வீடா அவருக்கு உரித்தாக வேண்டும்.அதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
110000 பாதி சேதமடைந்த வீடுகள் உள்ளன. மதிப்பீடு செய்யாமல் 5 இலட்சம் ரூபா வழங்குமாறு பணித்துள்ளோம். சேதத்திற்கு 5 இலட்சம் செல்லாது என கேள்வி எழுப்பினர்கள். இரண்டு கூரை ஓடுகள் உடைந்ததற்கு 5 இலட்சம் செலவாகாதே என வினவுகின்றனர். நாம் 5 இலட்சத்தை 3 இலட்சம் மற்றும் 2 இலட்சமாக தவணை அடிப்படையில் வழங்குகிறோம். அவருக்கு தனது வீட்டில் புதிய அறையொன்றை கட்டலாம். குறைந்தபட்சம் மலசலகூடமொன்றை கட்டலாம்.எமது பிரஜைகளுக்கு அது அவசியமில்லையா?
இந்த அனர்த்தத்தினால் முழுமையான சேதம் மற்றும் பகுதியளவு சேதம் என அனைத்து வீடுகளிலும் எமது பொருளாதாரத்தின் விழிம்பில் வாழும் மக்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதேபோன்று பயிர்செய்கைகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மீண்டும் வளர்க்க வேண்டும். கைத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பல கட்டங்களின் இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது முதலாவது கட்டம்.குறைந்த உயிர்சேதத்துடன் மக்களை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்தோம். அவர்களை பராமரிப்பு நிலையங்களில் தங்கவைத்து பராமரிப்பது இரண்டாவது கட்டமாகும். உணவு,சுகாதாரம் மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்பட்டன.
பராமரிப்பு நிலையங்களில் நீண்டகாலம் தங்க வைக்க முடியாது. ஏழெட்டு குடும்பங்கள், பல்வேறு வயது மட்டத்தினரை நீண்டகாலம் ஒரே இடத்தில் வைத்திருக்க முடியாது.மக்களால் அவ்வாறு வாழ முடியாது .எனவே துரிதமாக பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியில் கொண்டு வந்தோம். வீடொன்றை கட்டியோ அல்லது உறவினர் வீட்டில் தங்க வைத்தோ வாடகை வீட்டில் இருக்கவோ கொடுப்பனவு வழங்கப்பட்டது. பராமரிப்பு நிலையங்களில் சிறிதளவானவர்களே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கும் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். மின்சாரம்,தொடர்பாடல், நீர், வீதிகட்டமைப்பை இரு வாரங்களுக்குள் முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அவர்களின் அன்றாட வாழ்வை ஆரம்பிக்க அவை அவசியம்.சிலவற்றை தற்காலிகமாக செய்தோம். சில வீதிகளை மணல் மூடைகளைக் கொண்டு உருவாக்கினோம். தற்காலிகமாக அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை செய்தோம்.
அடுத்து அவர்கள் தமது பொருளாதார வாழ்வாதாரத்திற்கு திரும்புவதற்காக நடவடிக்கை எடுத்தோம். டிசம்பரில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது. டிசம்பரில் பெரும்போகம் நிறைவடைகிறது. டிசம்பர் மாதத்திற்குள் மீள பயிற்செய்கை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம். கால்நடைகளை வளர்ப்போருக்கு புதிதாக கால்நடையை கொள்வனவு செய்ய உதவி, கைத்தொழிலில் ஈடுபட்டவருக்கு கைத்தொழிலை ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவி வழங்குவது எமது எதிர்பார்ப்பாகும். இந்தச் செயற்பாடு பெருமளவு நிறைவடைந்துள்ளது.
தற்காலிக நிர்மாணங்களை ஸ்தீரமானதாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். பாதைகள் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிரந்தரமாக நிர்மாணிக்க வேண்டும். இவற்றில் அதிகமானவை கிராமிய வீதிகளாகும். வடிகால்கள் அற்ற பாதைகள் உள்ளன. வீட்டுத் தோட்டத்தை விட பாதை தாழ்வாக உள்ளன. மழைபெய்தால் அவை ஆறாக மாறிவிடும். அவற்றை உரிய வகையில் மீளமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பாதைகளை வடிகால்களுடன் சற்று உயரமாக உரிய வகையில் நிர்மாணிக்க எதிர்பார்க்கிறோம். உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் ஸ்தீரமாக நிர்மாணிக்க இருக்கிறோம். அடுத்து நீண்ட கால முன்னெடுப்புள் உள்ளன.
மலையகம் என்பது நாட்டின் இதயமாகும். நாட்டில் உயர்ந்த நாகரிகம் உருவாகுகையில் மத்திய மலைநாட்டின் தாக்கம் பாரியதாக இருந்தது. ஒரு காலத்தில் மத்திய மலைநாடு பெருமளவு காடுகளை கொண்டிருந்தது.ஹோர்டன் பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் 108 யானைகளை கொன்றதாக நாம் கேட்டறிந்திருக்கிறோம். யானைகள் மின்னேறியாவில் அன்றி ஹோர்டன் பிரதேசத்தில் தான் உள்ளன.
எமது மூதாதையர்கள் மத்திய மலைநாட்டை சிறப்பாக பாதுகாத்து அங்கு ஓடும் ஆற்று நீரை மறித்து விவசாயம் செய்தார்கள். அவ்வாறு தான் அங்கம்மெடில்ல அணைக்கட்டு உருவானது. மினிபே அணைக்கட்டு உருவானது. மலையில் இருந்து உருவாகும் ஆற்றை மறித்து விவசாயம் செய்தார்கள். ஆனால் ஏதோ ஒரு திரிபாட்டின் காரணமாக நாம் சமவெளியை (தென்ன) காடாக்கினோம் .மலைகளை சுத்தம் செய்தோம். 103 ஆறுகள் அங்கிருந்து ஊற்றெடுக்கின்றன. நாட்டைச் சுற்றி அவை ஓடுகின்றன. ஆனால் அனைத்து ஆறுகளும் அழிவிற்கு முகங்கொடுத்துள்ளன. மலைநாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த அழிவுகள் பல தசாப்தங்களான ஏற்பட்டன. எனவே இந்த அழிவை சீரமைப்பதற்கு பல தசாப்தங்கள் செல்லும். மீண்டும் மத்திய மலைநாட்டிற்கு உயிர்மூச்சு வழங்க வேண்டும். வரண்ட செயலிழந்த மலைநாடே இன்று இருக்கிறது. சென்று பாருங்கள்.
மக்கள் வசிக்காத மலைகளிலும் விரிசல் விழுந்துள்ள புகைப்படங்கள் உள்ளன. இந்த நிலை எங்கு சென்று முடியப் போகிறது. எனவே நாம் அதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம். மத்திய மலைநாட்டிற்கு உயிரோட்டத்தை கொண்டு வர வேண்டும். நிலைபேறான அபிவிருத்திப் பாதை நாட்டுக்கு அவசியம். மீண்டும் மலையகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்பி நாட்டின் எதிர்காலத்திற்காக நிரந்தரமாக இதனை பாதுகாக்க வேண்டும்.
மலையகத்திற்கு சேதம் ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள இடமளிக்காமல் தடுப்பது முதலாவது நடவடிக்கையாகும். இதனை மீளமைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவது அடுத்த முன்னெடுப்பாகும். அது தொடர்பில் நாம் உறுதியான முடிவுடன் இருக்கிறோம்.வரண்ட மலைநாட்டை எதிர்கால சந்ததிக்காக மீள போசிக்க வேண்டும்.
அடுத்து இவ்வாறான அனர்த்தங்களின் போது நாம் அனுபவங்களை பெற்றுள்ளோம். நிதி ஒழுக்கத்தை பலமாக பாதுகாக்க வேண்டும்.அனர்த்தங்களின் போது பொதுவான செயன்முறைகள் வீழ்ச்சியடைகின்றன. அனர்த்தத்தின் போது அனைவரும் குழம்பிப் போகின்றனர்.அந்தக் குழப்பத்தினால் நிதி ஒழுக்கத்தில் வேறு வேறு பாதைகள் உருவாகும். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சதத்திற்குமான பொறுப்பை நாம் ஏற்கிறோம்.நிதி ஒழுக்கத்தை நாம் முழுமையாக பாதுகாப்போம்.
யாராவது வைத்தியசாலையொன்றைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கினால் அந்த வைத்தியசாலை தற்பொழுது என்ன நிலைமையில் உள்ளது என்பதை அவர் அறியமுடியும். எந்தளவு செலவிடப்பட்டுள்ளது. வைத்தியசாலை எந்தளவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதிலுள்ள வெளிப்படைத் தன்மைக்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம்.
இதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமானது. எம்மால் இதனை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எவ்வாறு உருவாகிறது. நான் என்னைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளேன். தனக்கு தன்னை பற்றிய நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அரச பொறிமுறை தொடர்பில் நம்பிக்கை கொள்கிறேன். சில குற்றச்சாட்டுகள்,விமர்சனங்கள் இருக்கலாம். அனைத்து அரச ஊழியர்களுக்கும் அரச சேவையில் இணைகையில் தொழில் பற்றிய கௌரவமும் ஆர்வம் இருக்கும். இதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சேவையில் இணைந்து சில காலத்தில் எனக்கு மாத்திரம் இந்த ஆர்வம் இருந்து என்ன பயன் என்று தோன்றும். வீழ்ச்சியடைந்த கலாச்சார சூழலுக்குள் அவர் செல்கிறார். எனவே நான் இங்கு பைத்தியக்காரன் போலல்லவா இருக்கிறேன் என சிந்திப்பார். அவருக்கு சாதகமான சூழல் அங்கு கிடையாது. அவரை திசைதிருப்பும் சூழலே இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும்.
ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் இணையும் போது தன்னிடமுள்ள சகல திறமைகளையும் பயன்படுத்தி கற்பிப்பார். ஒரு வருடம் செல்லும் போது நான் மாத்திரம் ஏன் என சிந்திப்பார். இது தான் இங்குள்ள பிரச்சினை.தன்னிடமுள்ள அறிவு, நாட்டைப்பற்றிய பிணைப்புடன் தான் அனைத்து அரச ஊழியர்களும் அரச சேவையில் இணைகின்றனர். ஆனால் எமது அரச சேவை அதனை மழுங்கடிக்கிறது. அழித்துவிடுகிறது. எனவே இதனை உயிரோட்டமாக்க முடியும் என நம்புகிறோம்.
அரச சேவை தொடர்பில் நம்பிக்கை வைத்தே இந்த பணியை ஆரம்பித்துள்ளோம்.எமது தொழில்நுட்பவியலாளர்கள், நிபுணத்துவ அறிவுள்ளோர் இருக்கிறார்கள். அவர்களை நாம் ஓரங்கட்டவில்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான அறிவு தொடர்பில் எமக்கு நம்பிக்கை உள்ளது. பாலங்களை துரிதமாக திட்டமிட்டு நிறைவு செய்வதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தது. பெப்ரவரியில் அவற்றை நிறைவு செய்து வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கீழுள்ள பாதைகள் மாத்திரமன்றி மாகாண சபை பாதைகளை நிர்மாணிப்பதற்கு உதவ உடன்பட்டுள்ளனர். தொழில்நுட்பவியலாளர்கள், நிபுணர்கள் குறித்து நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
எமது மக்களிடம் உள்ள குணப்பண்பு தொடர்பில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். வேறு வேறாகப் பார்த்தால் சமூகம் பின்னடைந்துள்ளதாக தெரியலாம். சம்பவங்களின் அடிப்படையில் சமூகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தோன்றும். அவை அனைத்திற்கும் மத்தியில் இலங்கையர் என்ற தங்களுக்கே உரித்தான குணப்பண்பு உள்ளது. அந்த குணப்பண்பு சிறு வயது முதல் எமக்கு கற்பிக்கப்படுகிறது. மேகங்களினால் அவை மறைந்துள்ளன. பெற்ற தாய்க்கு ஒப்பானது தாய் நாடு என்கிறோம்.எமக்குள் அந்த குணப்பண்பு உள்ளது. அந்த குணப்பண்பு சாகவில்லை. வேறு விடயங்களினால் அந்த குணப்பண்பு மறைந்துள்ளது. அனர்த்தங்களின் போது மற்றவர் குறித்து கவலை ஏற்படுகிறது.
அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த 24 இலட்சம் மக்கள் மாத்திரமல்ல தூங்காமல் விழித்திருந்தார்கள். இன்னும் பலர் தூங்காமல் இருந்தார்கள். அது தான் மற்றவர் மீதான கரிசனை. இவை வரண்டுள்ளன. அவற்றை மீள வெளிப்படுத்த வேண்டும். மக்களின் குணப்பண்பு தொடர்பில் எமக்கு நம்பிக்கை உள்ளது. அந்த குணப்பண்பு தான் தொண்டர் அடிப்படையில் சென்று சேவை செய்ய ஊக்கப்படுத்துகிறது. அந்த குணப்பண்பு தான் தான் பாடுபட்டு உழைத்த பணத்தில் ஒரு பங்கை உதவ ஊக்கப்படுத்துகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றுவதற்கு அந்த குணப்பண்பு தான் காரணம். அந்தகுணப்பண்பு தான் தனது காணியை அன்பளிக்கச் செய்கிறது.
காணிக்காக அண்ணனும் தங்கையும் வழக்கு தொடர்கிறார்கள். ஆனால்,இவ்வாறான அனர்த்தத்தில் காணியை அன்பளிக்கின்றனர். நாம் அந்த குணப்பண்பு மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எமது நாட்டு மக்கள் குறித்து நம்பிக்கை வைத்துள்ளோம்.எம்மால் மீண்டெழ முடியும்.
குறிப்பாக வெளிநாட்டு நண்பர்கள் பெருமளவு ஒத்துழைப்பு வழங்கினார்கள். மீட்புப் பணிகளுக்கான தொழில்நுட்ப உதவி , பராமரிப்பு நிலையங்களில் பாதுகாப்பதற்கான உதவி மற்றும் கட்டியெழுப்புவதற்கான பாரிய உதவியை வழங்கினார்கள். மேலும் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
சிறு துரும்புகள் இணைந்து பாரிய கயிறாக மாறுவதைப் போன்று இந்த அனைத்தையும் ஒன்றாக பின்னுவதற்கு முடிந்தால் எமக்கு பலமாக மீள கட்டியெழுப்பும் முன்மாதிரியை உலகுக்கு காண்பிக்கலாம். கலைந்துள்ள அனைத்து திறமைகளையும் சிறிய பெரிய என்ற பேதமின்றி ஒன்றிணைத்து பாரிய குணப்பண்பு இந்த சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக ஒத்துழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
அதேபோன்று மிகச் சிறப்பாக காலத்திற்கு உகந்த இணையத்தளத்தை அமைத்து தன்னார்வ அடிப்படையில் முன்வந்த எம்ஐபி நிறுவனம் மற்றும் டயலோக் நிறுவனம் என்பவற்றுக்கு நன்றி. அவர்கள் தான் இந்த யோசனையை முன்வைத்தார்கள். பின்னர் அவர்கள் இதனை உருவாக்கி மக்கள் மயப்படுத்த உதவியளித்தார்கள்.
மீள எழுச்சி பெறும் திடஉறுதியுடன் உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.




