இலங்கை மத்திய வங்கி சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படுகிறது. அமெரிக்க டொலர் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்த மத்திய வங்கி பொறுப்புடன் செயற்படவில்லை. இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளேன் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலகளாவிய ரீதியில் டொலரின் பெறுமதி உயர்வடையும் சாத்தியம் காணப்படுகின்ற நிலையில், டொலர் கையிறுப்பை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கியிடம் வலியுறுத்தினோம். இருப்பினும் மத்திய வங்கி அதனை கருத்திற் கொள்ளவில்லை.
பாராளுமன்ற குழுவில் முன்னிலையாகிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, தொகைகடன் பொருளாதாரத்துக்கு ஒருபோதும் தாக்கம் செலுத்தாது என்று குறிப்பிட்டார்.ஆனால் மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தொகைகடன் செலுத்துவதற்கு வருடாந்தம் 4500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் பாராளுமன்றத்துக்கும் பொய்யுரைத்துள்ளார். இலங்கை மத்திய வங்கி சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படுகிறது. அமெரிக்க டொலர் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்த மத்திய வங்கி பொறுப்புடன் செயற்படவில்லை. இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும், தற்போதைய நிதி முகாமைத்துவ சிக்கலுக்கும் இலங்கை மத்திய வங்கியே பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய டொலர் மற்றும் ரூபா நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு மத்திய வங்கி முன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் செய்யும் மனநிலை எமக்கு கிடையாது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதற்கு நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியினர் அல்ல, நாட்டுக்கு டொலர் அனுப்புமாறு புலம்பெயர் இலங்கையர்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



