மலையகத் தமிழர்கள் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு திட்டமிட்ட இன அழிப்பே காரணம்

இலங்கையில் இரண்டாவது இனமாக இருந்த மலையக தமிழர்கள் இன்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் இது திட்டமிட்ட இன அழிப்பும் இன சிதைவுமே காரணம்  என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று  திங்கட்கிழமை ( 07 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகம் 200 நிகழ்வுகளில் தலைமன்னாரிலிருந்து ஆரம்பமான மக்கள் பேரணி எதிர்வரும் 12-ம் திகதி மாத்தளையில் பிரமாண்டமான மக்கள் கூட்டத்தோடு நிறைவடைய உள்ளது. அதே தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஒழுங்கு செய்யப்படும் நுவரெலியா மற்றும் ஹற்றனிலிருந்து ஆரம்பமாகும் பேரணிகள் தலவாக்கலை நகரில் நடக்கும் பொதுமக்கள் கூட்டத்தோடு நிறைவடையும்.

மலையக மக்களின் வாழ்வில் புதிய  நூற்றாண்டை நோக்கிய மாற்றத்துக்காக முன்னெடுக்கப்படும் பேரணிகள் இன அழிப்புக்கு முகம் கொடுக்கும் மலையக தமிழர்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார நீதியையும் பாதுகாப்பையும்  மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.

இரண்டு பேரணிகளின் இறுதியில் செய்யப்படும் பிரகடனம், கோரிக்கைகள், முன்மொழிவுகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதுவே போர் அணியாகிவிடும் ஆபத்து உள்ளது என்பதோடு அது பேரினவாதிகளுக்கும் வாய்ப்பாகவும் அமைந்துவிடும் என்பதையும் கூற விரும்புகின்றோம்.

மலையகத் தமிழர்கள் 1948க்கு முன்பிருந்தே பல்வேறு வகையான இன அழிப்பினை சந்தித்து வருகின்றனர். 1964 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சினிமா- சாஸ்திரி ஒப்பந்தமும் இன அழிப்பே. இந்திய அரசின் உதவித் திட்டங்கள், சலுகைகள் அதற்கு தீர்வாக அமையாது.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது இலங்கையில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இனமாக இருந்த மலையக தமிழர்கள் இன்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் இது திட்டமிட்ட இன அழிப்பும் இன சிதைவுமே காரணம் எனலாம்.

பேரினவாதத்தின் தொல்லியல் திணைக்களம் மலையகத்தில் அகழ்வு பணிகளை மேற்கொண்டால் எம் முன்னோர்களின் உடல் எச்சங்கள் மட்டுமே கிடைக்கும். அத்தோடு மண்ணை ஆராய்ந்தால் அதில் எம்மவர்களின் இரத்த வியர்வை வாசனை மட்டுமே வீசும். இந்த மண் தமிழர்களுக்கு சொந்தமான மண்.

மலையகம் எனும் தேசத்தை உயிர் தியாகத்தோடு உருவாக்கி நாட்டின் நவீன பொருளாதார அபிவிருத்திக்கு வித்தாகி உழைத்து வரும் மக்கள் சமூகம் தாம் உருவாக்கிய தேசத்தில இன்றும் நில உரிமையற்றவர்களாக, முகவரியற்றவர்களாக,  நிரந்தரமற்ற குடிகள் போல் வாழ வைக்கப்பட்டிருக்கும் காலமிது.

மலையக தமிழர்களின் இத்தகைய வாழ்வு சூழ்நிலையில் நடத்தப்படும் பேரணிகளின் இலாப நட்ட கணக்கு எந்த பேரணியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது? எத்தனை மில்லியன் ரூபா செலவானது? மேடையை அலங்கரித்தவர்கள் யார்? வீர வசனம் பேசியவர்கள் யார்? யாருக்கு அதிக கரகோஷம் கிடைத்தது? என்பதில் தீர்மானிக்க கூடாது. அத்தோடு பேரணிகளின் இறுதியில் மலையகத்தை மையப்படுத்திய திட்டங்களை எவ்வாறு முதலாளித்துவ ஏஜெண்டுகளிடம் கையளிக்கலாம்? அடுத்த தேர்தலில் போட்டியிடுவது யார்? எத்தனை வாக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும்? எனும் கேள்விகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி விடவும் கூடாது.

ஆதலால் எதிர்வரும் 12 ம் திகதி மாத்தளை மற்றும் தலவாக்கலை நகரில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இரண்டு பேரணிகளும் பொதுப்பிரகடனம் அல்லது ஒத்த பிரகடனம், முன்மொழிவுகள், கோரிக்கைகளை வைப்பதற்கு பேரணியாளர்கள் ஆவன செய்தல் வேண்டும். அது எதிர்வரும் நாவம்பர் மாதம் அரசு நடத்தும் மலையகம் 200 நிகழ்வில் தாக்கம் செலுத்துவதாகவும் அமையும்.

மலையகத்தின் எதிர்காலம் அரசியல் தலைமைகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் சக்தியையும் உள்ளடக்கிய முக்கூட்டு செயல்பாடு எனலாம். கூட்டாக பயணிப்பதற்கான உந்து சக்தியாக பேரணிகள் வழி வகுக்க வேண்டும் என்பது பொது விருப்பாகும். அதுவே பேரணியின் வெற்றியாகவும் அமையும். அதுவே மலையக தமிழர்களின் இனத்துவ அடையாள வெற்றியாகவும் அமையும்.