மலையக எழுச்சி பேரணியை மிகிந்தலையில் வரவேற்ற சர்வமத தலைவர்கள்

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் பத்தாம் நாள் நடைபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மதவாச்சியில் ஆரம்பமாகி மிகிந்தலையை அடைந்தது. இதன்போது சர்வ மத தலைவர்களும் அவர்களை வரவேற்று ஆசி வழங்கினர்.

மேலும், இக்கிரிகொல்‍லேவ பகுதியில் முஸ்லிம் மக்கள் மலையக மக்களை வரவேற்று உபசரித்ததோடு, மலையக மக்களின் நலன் வேண்டி பிரார்த்தனை செய்துள்ளனர்.

அத்தோடு, ரம்பேவ பிரதேச செயலக வளாகத்திலும் மலையக மக்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரம்பேவ பகுதியைச் சேர்ந்த மக்கள் பேரணியினரை எதிர்கொண்டு உபசரித்ததை தொடர்ந்து, அங்கே பாடசாலை மாணவர்களுக்கு நடைபயணம் பற்றி பேரணியினர் தெளிவுபடுத்தினர்.

இதனையடுத்து, பிற்பகல் 3 மணியளவில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தை இப்பேரணி அடையும் என கூறப்படுகிறது.

குறித்த மலையக பேரணி நேற்றைய தினம் (05) மதவாச்சியில் ஓய்வெடுத்ததையடுத்தே இன்று பயணத்தை மதவாச்சியில் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மலையகம் 200 நிகழ்வை முன்னிட்டு தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னார், புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

இப்பேரணியினர் எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையை அடைவதோடு மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பின் கூட்டிணைவிலான 16 நாள் நடைபயணத்தை நிறைவு செய்துகொள்வர்.