மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (19) பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
எமது கொள்கை பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை அமைத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதிய அரசியலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இது தொடர்பான காலப்பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.
அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 2017/17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய எல்லை நிர்ணயம் தொடர்பிலும், தேர்தல் தொகுதிகள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும்.
இதுவரையில் எல்லை நிர்ணய நடவடிக்கை முடிவடையாத காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இதனால் இதில் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். 2026ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான குழுவொன்றுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான சட்டவரைபுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





