மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது.
குறித்த விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
வட்டார எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும், அவ்வாறானதொரு அறிக்கை கையளிக்கப்படவில்லையென தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகள் இக்குழுவில் தெரிவித்தனர்.
இதற்கு அமைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் நடைமுறையைத் தொடர்வதற்குத் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அடிப்படைச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதன் மூலம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வினவினர்.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தை இரத்துச் செய்து மீண்டும் அடிப்படைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. குறித்த சட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான திருத்தம் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலத்தில் முன்னைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர், 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கிடைக்கக்கூடிய சட்ட விதிகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், குழுவின் அடுத்த கூட்டத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆரய்ச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, லக்ஷ்மன் நிபுண ஆராச்சி மற்றும் சமன்மலி குணசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.













