அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை சடுதியாக அதிகரித்தமையானது நாட்டு மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மக்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று எனவும், இதனால் நாட்டின் 6.7 மில்லியன் மின் நுகர்வோரில் சுமார் 5.2 மில்லியன் பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மீது அரசாங்கம் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் மின்சார சபையின் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுத்து, மின்கட்டணத்தை 33% இனால் குறைப்பதாகத் தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், யதார்த்தத்தில் அதற்கு மாறாக மின்கட்டணத்தை 40% இனால் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக அரசாங்கம் கூறும் காரணத்தை நிராகரித்த அவர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்தமையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம் எனத் தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக 150 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு இழக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை ஈடுகட்ட அதிக விலைக்கு டீசல் மூலம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதால் ஏற்படும் நஷ்டத்தையே அரசாங்கம் தற்போது மக்கள் மீது சுமத்தியுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், எரிபொருள் விலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகள் உலகளாவிய நெருக்கடியின் போது மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கினாலும், இலங்கை அரசாங்கம் ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 115 ரூபாவையும், டீசலுக்கு 91 ரூபாவையும் வரியாக அறவிடுவதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையில் மூன்றில் ஒரு பகுதியை வரியாக அறவிடும் அரசாங்கம், தனியார் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அந்த வரிகளைக் குறைக்க மறுத்து வருவதாகச் சாடினார். அத்துடன், மின்சாரப் பாவனையைக் குறைக்குமாறு அமைச்சர்கள் முன்வைக்கும் யோசனைகள் அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுவதாகவும், 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அரசாங்கம் குறுகிய காலத்தில் 1.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள போதிலும், மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தனது கடும் அதிருப்தியை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.


