மின்சார சபையை கலைத்துவிட்டு மறுசீரமைப்பதே ஒரே தீர்வு – அசேல சம்பத்

இலங்கை மின்சார சபையானது வினைத்திறனற்ற மற்றும் நுகர்வோரை அச்சுறுத்தும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளதாகவும் அந்தச் சபையை கலைத்துவிட்டு முறையான மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதை வரவேற்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்

மின்சார சபையின் செயற்பாடுகள் இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளன. நேற்று எனது கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 5000 ரூபா மின் கட்டண நிலுவைக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு வருடங்களாக முறையாக மின் கட்டணம் செலுத்தி வரும் எம்மைப் போன்ற நுகர்வோருக்கு ஒரு மாத நிலுவைக்காக இவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க மின்சார சபைக்கு என்ன அருகதை இருக்கிறது? நாம் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. இவ்வாறான பிச்சைக்கார சபையை தொடர்ந்தும் பராமரிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதற்கு நுகர்வோர் காரணமல்ல. நிலக்கரி கொள்வனவு மற்றும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊழல் முறையற்ற நிர்வாகம் என்பவற்றால் ஏற்படும் நஷ்டத்தை ஏன் பொதுமக்கள் சுமக்க வேண்டும்? இன்று மின்சார சபைப் பணியாளர்களுக்கு பதிலாக தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இளைஞர்களே மின்சாரத்தை துண்டிக்க வீடுகளுக்கு வருகிறார்கள். இவ்வாறான நிலையில் இந்த சபையை கலைத்துவிட்டு புதிய முறையில் கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் சூரிய சக்தி மூலம் முழு உலகிற்கும் மின்சாரம் வழங்கும் அளவுக்கு வசதி இருந்தும் அதிகாரிகள் ஏன் நிலக்கரி மற்றும் டீசலில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்? உலர் வலையமான அனுராதபுரம் போன்ற பகுதிகளில் சூரிய சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் பாரிய மின் நெருக்கடியைத் தீர்க்கலாம். மிஹிந்தலை புனித பூமி தற்போது சூரிய சக்தியால் ஒளிரப்போவது ஒரு சிறந்த முன்னுதாரணம். இவ்வாறான திட்டங்களை விடுத்து, நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவதை ஏற்க முடியாது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து எதிர்வரும் 18ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எனவே பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கிவிட்டு சாமானிய மக்களை 5000 ரூபாவுக்கு அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மின்சார சபையை முழுமையாகத் துப்புரவு செய்து வினைத்திறனான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.