மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அழுத்தம் விடுத்து முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு தற்போது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உயிர்களுடன் விளையாடும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சுகாதாரத்துறைக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் தீர்மானிக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அழுத்தம் விடுத்து முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பின்னர் தமக்கு நெருங்கியவர்களை நியமித்தனர். தற்போது அங்கிருந்த மருந்தாளர்கள் சிலரையும் நீக்கியுள்ளனர்.
இது போன்றதொரு நிலைமையே எரிவாயுக்கும் இருந்தது. எரிவாயு வெடிப்புகள் காரணமாக சில உயிர்ச்சேதங்கள் பதிவாகியிருந்தது.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் தயாராக இல்லை. எரிபொருளுக்கும் இதையே நிலைமையே ஏற்பட்டது. நாம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பில் கதைத்தோம். முன்னெச்சரிக்கை விடுத்தோம். அவ்வாறு எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என அமைச்சரும், அதிகாரிகளும் கூறினர்.
நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. உயிர்களுடன் விளையாடும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என்றார்.