முத்துநகர் விவசாயிகள் 22ஆவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (8) முத்துநகர் விவசாயிகள் 22ஆவது நாளாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தம்மை ஏமாற்றி வருவதாகவும் இதுவரை வழங்கப்பட்ட எவருடைய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தமக்கான தீர்வினை எழுத்துமூலமாக வழங்க வேண்டும் எனவும் அதுவரை நாம் இவ்விடத்தை விட்டு நகர மாட்டோம் எனவும் இதன்போது விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேலும் கூறுகையில்,

முத்துநகர் விவசாயிகள் 352 பேருக்கும் விவசாய நிலங்களை மீள வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைக்கு 352 விவசாயிகளுக்கும் நிலம் வழங்க முடியாது எனவும், எவருக்காவது வேறு எங்காவது 2 ஏக்கர் நிலம் இருந்தால் அவர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் விவசாய நிலம் வழங்க முடியாது என அரச தரப்பில் கூறப்பட்டு கிராம உத்தியோகத்தர் ஊடாக வருமான விபரங்கள் உள்ளிட்ட தரவுகள் திரட்டப்பட்டு வருகின்றன எனவும் கூறுகின்றனர்.

அத்துடன், வேறு இடத்தில் காணி இருந்தால் நாங்கள் ஏன் இந்த காணியை கேட்கின்றோம், அதை நடைமுறைப்படுத்துங்கள். பரவாயில்லை கௌரவ பிச்சைக்காரனாக இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்க முடியாது என்ற கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். பல வருடகாலமாக காடாக இருந்த நிலத்தை பண்படுத்தி வியர்வை சிந்தியிருக்கின்றோம். சோலார் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி எம்மை வெளியேற்றிய நிலையில், 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலத்தில் இதுவரை எந்தவித சோலாருக்கான அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.