முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் அவற்றினை நேரில் பார்வையிட்டார்.
வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளணித் தேவைகள் பெருமளவில் காணப்படுவதாக இதன்போது மருத்துவ அதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணி வெற்றிடங்கள் நிலவுவதால், பொதுமக்களுக்கு வினைத்திறனான மருத்துவச் சேவையை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புகள் சீரற்ற நிலையில் காணப்படுவதால், அந்த அறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டது.
வைத்தியசாலையில் நிலவும் இக்குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தாம் உரிய முறையில் கவனம் செலுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், வைத்தியசாலையின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்காகத் தகுந்த ‘நலன்புரிச் சங்கம்’ ஒன்றினை விரைவாக உருவாக்குமாறு மருத்துவ அதிகாரியிடம் அவர் வலியுறுத்தினார். அதற்கு இணக்கம் தெரிவித்த மருத்துவ அதிகாரி, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தக் களவிஜயத்தின் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.







