மைத்திரியிடம் 6 மணிநேரம் விசாரணை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை  நடத்தியது யார் என்பது தனக்கு தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில், குற்றப்புலனாய்வு (சி.ஐ.டி) பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சி.ஐ.டி தலைமையகத்துக்கு திங்கட்கிழமை (25) காலை 10.30க்கு அழைக்கப்பட்டார். அதனடிப்படையில், அங்குச் சென்ற மைத்திரிபால சிறிசேனவிடம், சுமார் 6 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி   வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விடுத்துள்ள கட்டளைக்கு அமையவே, சி.ஐ.டியினர் விசாரணைக்கு அழைத்தனர்.

கண்டியில், வௌ்ளிக்கிழமை (22) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டைப் பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றனர் என்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் தான் தகவலை வெளியிடும்போது அதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.