மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட கெப் ரக வாகனமொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது, குறித்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக அதன் சேஸ் இலக்கத்தை மாற்றி, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது.

குறித்த ஆவணங்கள் ஊடாக அந்த வாகனத்திற்கு ‘E’ வகை இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், சேஸ் இலக்கத் திருத்தக் கோப்புகளை சட்டவிரோதமாக மறைத்து வைத்து, போலியான வாக்குமூலங்களை வழங்கி, அந்த வாகனத்தை சட்டவிரோதமாக ஒன்றிணைக்க உதவியதாகவும் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 27ஆம் திகதி மாலை கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (30) குருணாகல் – பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.