யாழில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த 3 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் சுழியோடி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை (27) காலையில் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், செல்லுபடியாகும் சுழியோடி உரிமங்கள் இன்றி, சட்டவிரோதமாக இரவு சுழியோடுதலில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு, 450 கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேனி கடற்படை நிலையத்தால் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, ஒரு  சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு சோதனையிடப்பட்டது. அதனையடுத்தே கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 27 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள், கடல் அட்டைகள் இருப்பு, டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.