யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம்

கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் தற்போதைக்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் இடம்பெயர்ந்து இன்னும் சொந்த இடங்களுக்குத் திரும்பாத ஆயிரம் பேரளவிலான தமிழ்க் குடும்பங்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்கள் அல்லது அண்மித்த பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

எனினும் வடக்கில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் இன்று வரை புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை மீளக்குடியமர்த்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியர்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிர்வாகப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பாகுபாடு காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் தொடர்ந்தும் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புகளில் போதிய வருமானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளின்றி தவித்து வருவதாக வடக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.