தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் ஜனாதிபதியிடம் நேரில் சவால் விடுத்தார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து எழுந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு சவால் விடுத்தார்.
இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஒன்று வரக் கூடாது என்பதே ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றியவர்களின் கருத்துக்களாகவுள்ளன.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனை சிங்கள தலைவர்கள் தயாராக இருக்கின்றீர்கள்?
தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்ககளிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசு தயாரா ? என கேள்வியெழுப்பினார்.
இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான் தயாராகவுள்ளேன், தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை நான் அறிந்துள்ளேன்.நீங்கள் என்னை சிங்கள இனவாதி என்று குற்றம்சாட்டுகின்றீர்கள் ஆனால் அத்துரலியே தேரர் எம்.பி. என்னை தமிழ் ஆதரவாளர் என்கிறார்,அப்படியானால் நான் யார் ? என கேள்வி எழுப்பினார்.
எனினும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசு தயாரா ? என்ற ஸ்ரீதரன் எம்.பி.யின் விடுத்த சவால் தொடர்பில் எதனையும் கூறவில்லை.