சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதாக எவரும் வாக்குறுதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
ஆனமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்துள்ளதால் எமது கட்சியின் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரே ரணில் விக்கிரமசிங்க என்று ஒரு தரப்பினர் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதாக எவரும் வாக்குறுதி வழங்கவில்லை. ஒப்பந்தம் ஏதும் கைச்சாத்திடவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களை பலப்படுத்துவதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அவர்கள் பங்குபற்ற வேண்டும்.
பொதுஜன பெரமுனவுக்குள் இருந்துகொண்டு கட்சியையும் அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தியவர்கள் வெளியேறியுள்ளார்கள்.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மாத்திரமே தற்போது கட்சியில் உள்ளார்கள். ஆகவே தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேற்றமடைவது குறித்து அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.