சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார். ரணில் விக்கிரமசிங்க புதிதாகப் பணம் செலவழிக்காமல் ஒரு செயலாளரைப் பிடித்துள்ளார் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பொதுவாகப் பொதுவான பிரச்சினையாக எடுத்துக்கொண்டால், உங்களுக்கே தெரியும்—நாம் பொறுப்பேற்றது பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு, அழிக்கப்பட்டு, ஸ்தம்பித்துப் போய் இருந்த ஒரு நாட்டை ஆகும். 2024 செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலையில் இயங்கவில்லை. நாம் பொருளாதாரத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம், சீரமைத்துள்ளோம்.
அதேபோல நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடந்த நவம்பர் மாதத்தில் ‘தித்வா’ எனப்படும் சூறாவளி வந்து எமது நாட்டின் மக்கள் தொகையில் 11 சதவீதமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதற்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்ட அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக முடியடையவில்லை. அப்படி இருந்தும், உலக நாடுகள் இயற்கை பேரிடர்களினாலும் மத்திய கிழக்கு அச்சுறுத்தல்களினாலும் மக்கள் மீது பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், நாம் எந்தவொரு பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் இன்றி நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்.
அது மத்திய வங்கியின் அல்லது சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்களில் மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையிலும் உணரக்கூடிய அளவிற்குப் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்தியுள்ளோம். இப்போது இருப்பது, இதன் மீது நாட்டைப் பலப்படுத்துவதே ஆகும். இப்போது எவருக்கும் தனது எதிர்காலம் குறித்து ஒரு நிச்சயமான, தெளிவான நிலையை உருவாக்க முடிந்துள்ளது. எந்தவொரு நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும், தனிநபருக்கும், தொழிலதிபருக்கும் இப்போது தெளிவாகத் தங்கள் பொருளாதார இலக்குகளுக்கு ஏற்பப் பணிகளைத் தொடங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைத்தான் நாம் நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.
இதில் பிரதேசம், இனம், மதம், தொழில் போன்றவை கவனத்தில் கொள்ளப்படாமல், ஒட்டுமொத்தமாகப் பொதுவாகப் பொருளாதாரத்தின் கருவூலத்தைப் பலப்படுத்தும் அதேவேளையில், அதன் பலன்கள் மக்களுக்குச் சென்று சேர வழிவகை செய்யப்பட்டது. இது எமது இறுதி இலக்கு அல்ல, இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. எனினும், செல்லும் பாதையில் பயணித்து நாம் படிப்படியாக முன்னேறி வருகிறோம். மக்களின் வாழ்க்கையில் ஒரு சுலபமான நிலை உணரப்படுகின்றது. நாம் எந்தவொரு குறிப்பிட்ட வழியையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இப்போது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது அனைவருக்கும் புரிகின்றது.”
“உங்களால் பார்க்க முடியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிக விரைவாக இரத்து செய்யப்படும். அது தொடர்பான பணிகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன. சட்ட மறுசீரமைப்பு அல்லது ஒரு சட்டத்தை இரத்து செய்வது என்பது பேனா முனையினால் உடனே செய்துவிடக் கூடிய விஷயம் அல்ல.
இதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இதையெல்லாம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு வேறு தவறான காரியங்களைச் செய்துகொண்டிருந்தது. ஆனால் நாம் வாக்குறுதி அளித்தோம், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வோம் என்று சொன்னோம், அதை இரத்து செய்கிறோம. சட்டத்தை இரத்து செய்வதோடு மட்டும் அங்கே ஒரு வெற்றிடத்தை விட்டுவிட முடியாது. அதற்கேற்ப அமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்ட வரைவு ஒன்றை நாம் தயாரித்து வருகிறோம்.
ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், இப்போது போதைப்பொருள், பாதாள உலகக் குழுக்கள் உள்ளிட்ட இந்த அமைக்கப்பட்ட குற்றங்கள் உலகளவில் உள்ள குழுக்களுடன் சேர்ந்து இயங்கி வருகின்றன. அவை எந்த அளவிற்குப் போயிருக்கின்றன என்றால், முன்னாள் நீதி அமைச்சரின் மகன் ஒருவர் சிறையில் இருக்கும் பாதாள உலகத் தலைவனுக்கு ‘டீஓ’ போடாமல் (வழக்குத் விசாரணை இன்றி) சிறையில் அடைத்து வைக்க அல்லது அந்த ‘டீஓ’ காலத்தைக் குறைக்க, விடுவிக்க—1,000 இலட்சம் முதல் 5,000 இலட்சம் வரை பணப் பரிவர்த்தனைகள் செய்யும் அளவிற்கு நாடு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் நாம் பணியாற்றி வருகிறோம்.
அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யும்போது, அமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவதற்கான புதிய சட்ட வரைவும் உருவாக்கப்பட்டு வருகின்றது. எப்படியிருப்பினும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் எந்தவொரு சட்டத்தையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இந்த அரசாங்கம் பயன்படுத்தியது என்றால், அது இனவாதத்தைத் தூண்டுபவர்களுக்கு எதிராகவும், மக்களுக்குக் குற்றம் செய்பவர்களுக்கு எதிராகவும் மட்டுமே தவிர, மக்களுக்கு எதிராக அல்ல. மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதுகாக்கவும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் மட்டுமே நிலவும் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சட்டங்களிலும் குறிப்பிட்ட அளவிற்குச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பதைக்கூற முடியும்.”
கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் குறித்து ஆராயவும், அவற்றின் உரிமையை உறுதிப்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைக்காகப் பயன்படுத்தவும், தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கவும், மக்களின் கலாச்சார வாழ்க்கைக்கு உதவும் வகையில் சட்டங்களை உருவாக்கவும், திட்டங்களை வகுக்கவும் கடந்த காலத்தில் அமைச்சரவையில் இந்த மூன்று மாவட்டங்களின் அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை வழங்க ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்.”
அவர்கள் ஒன்றாயிருந்தவர்களே. ஒன்றாக இருந்தபோதே செய்ய முடியாத காரியத்தை, இரண்டாகப் பிரிந்து சென்று மீண்டும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாது.
மற்றொன்று, நான் பார்ப்பது இது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள்—ரணில் உத்தரவிடுகிறார், சஜித் அதை எழுதுகிறார். ரணில் விக்கிரமசிங்க புதிதாகப் பணம் செலவழிக்காமல் ஒரு செயலாளரைப் பிடித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவத்தோடு அவர் அங்கே சென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித் தான் தான் தலைவர் என்பதைக் காட்டுகிறார். சஜித் இரண்டாம் இடம் அல்ல, அதற்கும் கீழே தள்ளப்பட்டுள்ளார்.
அதற்கெல்லாம் நாம் பயப்படவில்லை. ஏனென்றால் அந்த அணியில் இணைந்திருக்கும் அனைவரும் வெளியில் வந்து குரல் கொடுத்த குழுவை எடுத்துப் பாருங்கள். அவர்களது வழக்குத் திகதிகளை எழுதிப் பாருங்கள். வழக்கு இல்லாத எவரும் அங்கே இல்லை; அனைவருக்கும் வழக்குகள் உள்ளன. ஒன்று பிணையில் உள்ளார்கள், இல்லையேல் சந்தேகநபர்களாக உள்ளார்கள். அந்தச் செட்தான் ஒன்று சேர்ந்துள்ளது. அவர்கள் ஒன்று சேர்வது நல்லதுதான், பிரிந்து இருப்பதை விட! ஏனென்றால் மக்கள் அவர்களைப் பார்க்கும்போதுதான் என்ன நடக்கிறது என்று புரியும்.”
“இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்ததை நாம் வெறும் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகப் பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக இந்த எதிர்க்கட்சிக் குழு பெரும் கூச்சலிட்டு வந்தது. ஏன்? லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்கு உதவிய சில அரசு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை விரைவுபடுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருகின்றது.
இந்தக் குழு குற்றப்புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகர அவர்களுக்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றது. ஏன்? ஊஐனு யால் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீண்டும் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் அமைச்சுச் செயலாளருக்கு, பொலிஸ் அமைச்சருக்கு எதிராகக் கடுமையான தாக்குதல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்கள்.
பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைத் தாக்குகிறார்கள். அதுமட்டுமன்றி, இப்போது நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளை இலக்கு வைத்தும் தாக்குதல் நடத்துவது தெரிகின்றது.
சிஐடி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம் என்று இந்தத் துறைகளை மட்டும் தேர்ந்தெடுத்துத் தாக்குவது ஏன்? அவற்றில் விசாரணை செய்கிறார்கள், வழக்குத் தொடுக்கிறார்கள், வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, வழக்குத் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்கும்போது, அவர்கள் தாம் இருந்த அரசியல் முகாம்கள் எதுவாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து தங்களின் வழக்குகளைக் தப்பவைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
இந்த நாடு என்பது… நான் முன்னரே கூறினேனே—நீதி அமைச்சரின் மகனும், அவரது நண்பரான அமைப்பாளரும் சேர்ந்து பாதாள உலகத் தலைவனிடம் 5,000 இலட்சம் லஞ்சம் கேட்டு, 1,200 இலட்சமாகக் குறைத்து, அதில் ஒரு பகுதியை வாங்கிய நாடு இது! பாதாள உலகத்துடன் தொடர்புடைய சஜபவின் பிரதேச சபை தவிசாளர் இருந்த நாடு இது! கைது செய்யப்படும் சில பிரதேச சபை உறுப்பினர்கள் சஜபவின் ஆயுதங்களை வீட்டில் வைத்திருந்த நாடு இது! இன்னும் சிலர் மீது விசாரணைகள் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பது தெரியவருகின்றது.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் நாம் பணியாற்றுகிறோம். அதனால் தங்களின் தொடர்புகள் வெளிப்படும்போது சஜித், ரணில், நாமல் போன்றவர்கள் குழப்பமடைவது இயல்புதான். எப்படியிருந்தாலும் ரணிலும் மொட்டுவும் சேர்ந்து செய்த வேலையில், பக்கவாட்டில் சஜித் போய்க்கொண்டிருப்பதுதான் தெரிகின்றது.”
“சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிசம்பங்கள் தொடர்பில்; அறிக்கையிடப்பட்டன. நாம் அவற்றைக் கட்டுப்படுத்தினோம். அப்போதும் சொன்னோம், இது தேசியப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்பதை விட, பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல். அத்தகைய பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம்; அவர்களுக்கு இடையிலான மோதல்களே அறிக்கையிடப்படுகின்றன. தெவுந்தர, களனி, ஜா-எல பகுதிகளில் நடந்த சம்பவங்களை எடுத்தால், அவை பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களே ஆகும்.
நாம் அவற்றைக் கடுமையாக விசாரித்தோம். 24 மணிநேரத்தில், 48 மணிநேரத்தில், அதிகபட்சமாக 3 நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இலங்கைக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பலரும் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளனர். அந்தப் பாதாள உலகத் தலைவர்களை நாம் வெலிசறை சிறப்புப் பாதுகாப்பு முகாமில் (சிறைச்சாலையில்) அடைத்து வைத்துள்ளோம்.
இப்போது ‘தவஸே வெடில்ல’ (நாளின் வெடி) சுடுவது நின்றுவிட்டது. இப்போது மீண்டும் சில சம்பவங்கள் அறிக்கையிடப்படுகின்றன.அவையும் அடக்கப்படும். வெளிநாட்டிலிருக்கும் மேலும் சில பாதாள உலகத் தலைவர்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பின்னர் இதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்தப் பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பது நாட்டின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது. நீதித்துறை, சிறைத்துறை, அரசியல், பிரதேச சபைகள் வரை ஊடுருவியுள்ளது. அவர்களின் வலையமைப்பு பரவியுள்ளது, அதற்குப் பெரிய அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது.
அப்படிப்பட்ட ஒன்றைத்தான் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாம் அடக்கி வருகிறோம். இதில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் உயிரைத் தியாகம் செய்து பணியாற்றுகிறார்கள். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் தாக்குதலுக்கு உள்ளான சிறைத்துறை அதிகாரி என்பவர், இந்தப்பாதாள உலகத்திற்கும் போதைப்பொருளுக்கும் எதிராகப் போராடியவர். அதன் ஒரு கட்டமே அந்த மோதல். அதுகுறித்து நாம் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.”
“மாகாணசபை தேர்தல் சாத்தியமான விரைவில் நடத்தப்படும். நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு முறை மற்றும் எல்லை நிர்ணயம் நிறைவு செய்யப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டவுடனேயே, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடனேயே மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.





