ரணில் வகுத்த திட்டத்திற்கான முயற்சி தோல்வி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகளை பெற ஜனாதிபதி வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதியின் கருத்துக்கும் சாகர காரியவசத்தின் கருத்துக்கும் பரஸ்பர வேறுப்பாடு இருப்பது சர்வக்கட்சி மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

போராட்டங்களின் ஊடாக பெற்றுக்கொண்ட தொழில் சட்டங்கள் அனைத்தையும் இரத்து செய்து முதலாளித்துவ வர்க்கத்துக்கு சாதகமான வகையில் உத்தேச தொழில் சட்ட மூலத்தை தொழில் அமைச்சு தயாரித்துள்ளது.இந்த சட்டமூலம் உழைக்கும் மக்களின் தொழில் உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் உழைக்கும் மக்கள் தொழில் ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். முதலாளித்துவ தரப்புக்கு சாதகமான முறையில் கடந்த காலங்களில் பல தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தது.

இவ்வாறான பின்னணியில் தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் உத்தேச தொழில் சட்டமூலத்தை தயாரித்துள்ளது.இந்த சட்டமூலம் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானது. ஆகவே சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி சர்வக்கட்சி கூட்டத்தில் தோல்வியடைந்தது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் சகல எதிர்ககட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தியமை விசேட அம்சமாகும்.

சுர்வக்கட சர்வக்கட்சி கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ‘ஆட்சியில் இருந்த ஏழு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிகள் ஏன் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதை ஆராயுங்கள்’ என்றார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ‘அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் இணக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால் இவ்விடத்தில் மாறுப்பட்ட கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்’என்றார்.ஆகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தில் ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்தொற்றுமை கிடையாது.பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு இருக்குமாயின் அவர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.