ரன்மிஹிதென்ன திரைப்படப் பூங்காவை தனியார் முதலீட்டின் மூலம் இயக்க அமைச்சரவை அங்கீகாரம்

ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை தனியார் முதலீட்டின் மூலம் பயனுள்ளதாக இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (18) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை திட்டமிடல், நிர்மாணித்தல், நிதியிடல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் (DBFOM) வடிவமைப்பின் கீழ் இயக்குவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக 2024.07.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுக்குச் சொந்தமான வர்த்தக ரீதியாக செயல்நுணுக்கமற்ற நிறுவனங்கள் பற்றிய மீளாய்வுக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவால் குறித்த திரைப்படப் பூங்காவின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ரன்மிஹிதென்ன தேசிய திரைப்படப் பூங்காவை 30 ஆண்டுகளுக்கு திட்டமிடல், நிர்மாணித்தல், நிதியிடல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் (DBFOM) வடிவமைப்பின் கீழ் தனியார் முதலீட்டின் மூலம் இயக்குவதற்கும், அதற்கு ஆர்வங் காட்டுகின்ற முதலீட்டாளர்களுக்கு போட்டித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.