லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவுகள் நீக்கப்பட்டு மீண்டும் ஒருமித்த நிலை!

லங்கா சமசமாஜக் கட்சிக்குள் நிலவி வந்த பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு அக்கட்சி மீண்டும் ஒருமித்த தரப்பாக ஒன்றிணைந்துள்ளதாகவும் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டிருந்த நிர்வாக ரீதியான இழுபறிகளுக்கு இரு தரப்பினருக்கும் இடையிலான சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதிச் செயலாளர் எஸ்.ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

கட்சியின் அரசியலமைப்பின்படி பிரதான செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இரு பதவிகளே சட்டபூர்வமானவை. இரு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு தரப்பிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளராக டபிள்யூ அபேசிறி மற்றும் மறுதரப்பிலிருந்து பொருளாளராக கீர்த்தி விதானகே ஆகியோர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் குறித்து நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளோம்.

கட்சிக்குள் தற்போது எவ்விதப் பிரிவினைகளும் இல்லை. அனைவரும் ஒருமித்த கருத்துடன் லங்கா சமசமாஜக் கட்சியாகச் செயற்படுகின்றனர். தன்னிச்சையாகச் செயற்பட்டு தாம் தான் செயலாளர் அல்லது பொருளாளர் எனக் கூறிக்கொள்பவர்களின் கருத்துக்களுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லை. இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் போதே அத்தகைய நியமனங்கள் செல்லுபடியாகும்.

கட்சியின் ஏனைய உட்கட்டமைப்பு பதவிகள் வரும் நாட்களில் இரு தரப்பினரினதும் ஆசீர்வாதங்களுடன் நிரப்பப்படும். தற்போது கட்சி வலுவான நிலையில் உள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து சட்ட ரீதியான பின்னணியுடன் கட்சி இனிவரும் காலங்களில் மக்கள் நலன் சார்ந்து செயற்படும். தமக்கிடையே பிணக்குகளை வைத்துக் கொண்டு நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது என்பதை உணர்ந்து மக்கள் நலனுக்காக இந்த ஒற்றுமை எட்டப்பட்டுள்ளது என்றார்.