பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெட்டி” என்பவரையும் அவரது பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசகரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) ) உத்தரவிட்டுள்ளது.
“லொக்கு பெட்டி” என்பவர் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் “லொக்கு பெட்டி”க்கு சொந்தமான 33 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வங்கி கணக்கு ஊடாக கையாண்டு வந்த தேவாலய பூசகர் ஒருவர் ஒக்டோபர் 16 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “லொக்கு பெட்டி” மற்றும் தேவாலய பூசகரையும் காணொளி அழைப்பு ஊடாக கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது “லொக்கு பெட்டி” சார்பில் ஆஜரான சட்டத்தரணி, லொக்கு பெட்டி கடந்த மே மாதம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் “லொக்கு பெட்டி” மீதான பிணை மனு எதிர்வரும் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.





