வங்கி சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், வங்கிக் கட்டமைப்பு ஒரு ‘அத்தியாவசிய சேவை’ என்பதால் வாரத்தின் அனைத்து ஐந்து நாட்களிலும் வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் புதன்கிழமைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் பின்வரும் விசேட நடைமுறையைப் பின்பற்றும்,

எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அனைத்து வணிக மற்றும் விசேட வங்கிகளும் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாத்திரம் இயங்கும். ஏனைய நான்கு நாட்களிலும் (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி) வங்கிகள் வழமையான நேரப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளுக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் (Digital & Online Banking) பயன்படுத்துமாறு இலங்கை வங்கிச் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது:

அத்தியாவசியத் தேவைகள்: மிக அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரம் வங்கிக் கிளைகளுக்குச் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மொபைல் அப்ளிகேஷன்கள் (Mobile Apps) மற்றும் இன்டர்நெட் பேங்கிங் ஊடாக அன்றாடப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் விநியோகத் தடைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்ப்பதாக வங்கிச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நீண்டகாலப் பாதிப்புகளின்றி மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பாக இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.