தமிழர் தேசத்தில் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் சிங்கள, பெளத்த பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்கள் துரிதமடைந்து வருகின்றன. வடக்கு- கிழக்கில் தமிழர் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் அரங்கேறிக் கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு வடிவங்களை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.லஜிதர் தெரிவித்தார்.
குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், உகந்தைமலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் புதன்கிழமை (04.06.2025) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
நல்லிணக்கம் மற்றும் மாற்றம் எனும் போர்வையில் நிலைகொண்டுள்ள சிங்கள- பெளத்த பேரினவாதத்தின் வடக்கு- கிழக்கில் தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்களாலும், தமிழ்த்தேசிய இனத்தின் மீதான திட்டமிட்ட கைதுகளாலும் போலியான முகத் திரைகள் கிழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.