வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப் பரப்பைக் கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் உடன் வெளியேற வேண்டும்

யாழ்.வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வைத்துள்ள வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணிகளை மக்களிடமே கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமெனக் கட்டைக்காடுப் பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கேவில் பகுதியில் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை புதன்கிழமை (25.03.2026) நேரில் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 ஆம் ஆண்டுக்குப் பின் கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை வடக்கு- கிழக்கில் நடந்து கொண்டிருக்கின்றன. அரச திணைக்களங்கள் ஊடாக இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரதேசத்துக்கும், வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. இங்கே காட்டு விலங்குகள் இல்லை, அடர்ந்த காடுகள் இல்லை. இந்தப் பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பகுதி என்று கூறிக் கொள்வதற்கான எந்தச் சான்றுகளுமில்லை. இந்தப் பகுதிக்குள் யானைகளைத் திட்டமிட்டுக் கொண்டு வந்து விட்டு இந்தப் பகுதி யானைகள் வசிக்கின்ற இடம், இது தேசிய பூங்கா என்பதனை ஊர்ஜிதம் செய்வதற்காக இத்தகைய செயற்பாட்டைச் செய்திருக்கக் கூடும். எங்களுடைய காணிகள் இவ்வாறு தான் அபகரிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.