வடமாகாண மட்டத் திறந்த கரம் போட்டி: சம்பியனாகத் தெரிவான மாணவி விதுர்ஷினி

வடமாகாண மட்டத் திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பாக ஒற்றையர் ஆட்டத்திலும், குழுப் போட்டியிலும் பங்கேற்ற யாழ்.வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்ஷினி இந்த வருடத்துக்கான (2026) வடமாகாணச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுப் போட்டியிலும் பங்கேற்று வடமாகாண அணிக்குத் தன் திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியனாவதற்கும் பங்காற்றியுள்ளார்.

கடந்த சித்திரை மாதம்-18 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்டமட்டக் கரம் போட்டியில் வேலணைப் பிரதேச செயலகம் சார்பாகக் கலந்து கொண்டு மாவட்ட மட்டப் போட்டியில் வெற்றியீட்டி யாழ் மாவட்ட அணியில் இடம்பிடித்த ஜெ.விதுர்ஷினி சனிக்கிழமை (13.06.2026) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மாகாணமட்டப் போட்டியிலும் வெற்றியீட்டிய நிலையில் இடம்பெறவிருக்கும் தேசியமட்டப் போட்டியில் வடமாகாணம் சார்பில் பங்கேற்கவுள்ளார்.