வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு நினைவாக 30 ஆம் திகதி யாழ்.நகரில் நினைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு நினைவாக எதிர்வரும்-30 ஆம் திகதி வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாடு இடம்பெறவுக்கதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (08.04.2026) பிற்பகல்-01 மணியளவில் நடந்த ஊடக சந்திப்பில் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் சார்பாகத் தவத்திரு.வேலன் சுவாமிகள், அருட்தந்தை. அகஸ்ரின் அடிகளார், அருட்பணி.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் இருதயராஜா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
1976 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ்மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளும், கொள்கைகளுமே தமிழின விடுதலைப் பாதையின் அடி நாதமாகவும், அடித்தளமாகவும் உள்ளது.

இந்த மாநாட்டில் கல்வியியலாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ்மக்களின் அபிலாசையை வெளிப்படுத்தப் பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஏற்பாட்டாளர்கள் அன்புரிமையுடன் அழைக்கின்றோம் எனவும் குறிப்பிட்டனர்.