பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து, பெட்ரோல் குண்டை வீசி, தீ மூட்டி கொளுத்தி, நடத்திய வாள்வெட்டு மற்றும் குண்டாந்தடி தாக்குதல் சம்பவத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்ணின் கணவரும் இன்று உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான சுகந்தன் என்ற 33 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் நுழைந்த 8 பேர், அங்கிருந்த சிறுவர்கள் உட்பட அனைவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கியிருந்தனர்.
பின்னர் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியதில் சுகந்தனின் மனைவியான 22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்களை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.