கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கனடாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என்பதும், அவரது மனைவி தொழில் தேடும் நிலையில் உள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (10) காலை 10.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்-403 (UL-403) என்ற விமானத்தின் ஊடாக இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





