விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ் போதைப்பொருளுடன் கனேடிய தம்பதியினர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (10) வெளிநாட்டிலிருந்து சுமார் 32 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ் ரக போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் மறைத்து நாட்டுக்கு கொண்டு வந்திருந்த கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மற்றும் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (10) காலை மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழமையான சோதனைகளை நிறைவு செய்துகொண்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் மற்றும் நபர் ஒருவரை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகத்திற்கிடமான இருபயணப்பொதிகளினுள் சூட்சுமமான முறையில் 23 சிறிய பொதிகளாக பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 32 கிலோ 159 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதான 25 வயதுடைய நபர் மற்றும் 29 வயதுடைய பெண் ஆகியோர் கனடா, அல்பேர்ட்டா பகுதியைச் சேர்ந்தவர்களாவர். மேலும் சந்தேகநபர் அந்நாட்டின் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. மேற்படி இருவரும் நேற்று (10) காலை 10.45 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-403 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.  இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.